Saturday, April 16, 2011

நாயகன்


வயது நூறுக்குமேல் ஆனாலும் உன் இளமை இன்னும் குறையவில்லை
இந்த மண்ணைவிட்டு நீ மறைந்ததாக பலரும் சொன்னாலும்
உன் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை
என் அப்பன் உன்னைகாட்டி என்னுடன் சிரித்தான்
நான் உன்னைகாட்டி என் மகனுடன் சிரித்தேன்
நாளை அவனும் அவன் பிள்ளையும்.........
என்று தணியும் உன்மேல் எங்கள் தீரா தாகம்
கற்பனைக்கும் எட்டாத விஞ்ஞான வளர்ச்சி
பிரம்மிப்பூட்டும் சாகசங்கள் விதவிதமாக நட்சத்திரங்கள்
எத்தனைதான் திரையில் தோன்றி வியப்பூட்டினாலும்
அந்த கந்தலாடை பரதேசிக்கு இணையாகுமா?
நீ ஏழைகளின் வாழ்க்கையை சொன்னாய்
கசக்கும் உண்மையை, ஏழ்மையை, அதன் வலியை
நகைசுவை தடவி தந்தாய்.
சிறியவயதில் சிரித்த நான் இன்று பிரம்மித்து நிற்கிறேன்
நீ பாமரர்களின் நாயகன்
உலகாண்ட கொடுங்கோலனும் உன் படம் பார்த்து அஞ்சினானாம்
நீ கம்யூனிஸ்டோவென்று வல்லரசும் அஞ்சியதாமே
வலிய ஆயுதங்கள் செய்ய முடியாததை உன் உடைந்த
கை தடி செய்து விட்டதா?
இன்றும் உன் வீரியம் குறைந்து விடவில்லை.
உன்னை அரைகுறையாக காப்பியடித்தவர்களெல்லாம்
எங்களூர் உச்சநட்சத்திரங்கள்
பேசா உன் திரைபடங்கள் பேசிய இன்மொழிகளை
இன்று செவிபறை கிழிய கத்தும் எந்த படமும் தரவில்லை
என்றும் வாழும் எம் நாயகனே
இந்த பாலைவனத்தில் நீதான் எம் சோலை.





Friday, April 15, 2011

வலியா?

ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டேன்
தீயிலிட்டு எரித்து சாம்பலை காற்றில் கரைத்துவிட்டேன்
பால்வெளியில் என்றோ பூமிக்கு அருகில் வரும்
வால்நட்சத்திரத்துடன் கட்டி அனுப்பிவிட்டேன்
என்றுமே திரும்பாத கடந்த காலத்துடன்
உறையவிட்டு நிறுத்திவிட்டேன்
ஆயினும்
இனிய நாதத்திற்கு இடையே கை தவறிபட்ட கட்டையால்
எழும்பும் ஒரு அபஸ்வர ஆனால் ஒரு இனிய ஒலிபோல்
கடும்கூட்டத்தினூடே ஒரு குழந்தையின் புன்சிரிப்புபோல்
ஆழ்ந்த அதிகாலை தூக்கத்தினூடெ வரும் ஒரு கனவு போல்
காரணத்தினுடனோ காரணமற்றோ அந்த நினைவுவரும்போது
அடி வயிற்றில் சுரீரென்று ஏதோ ஒன்று பரவுகிறதே
அது என்ன வலியா?  இல்லை உணர்வா?
 (மறப்பது கடினம்தான் அது தவறான பழக்கமாக இருந்தாலும்___ சிகெரெட் )

Monday, March 7, 2011

யுத்தம் செய்

சேரனை ஹீரோவாக போட்டு ஒரு மர்ம படம் என்றதுமே படம் பார்க்கும் ஆவல் எற்பட்டுவிட்டது. மேலும் பட விளம்பரத்திற்கு  பாரதியாரின் “பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா”  என்ற வரிகளை பார்த்தவுடன் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் மேலும்...,.
பார்த்துவிட்டேன். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது திருப்தியாக (ரொம்ப நாட்களுக்கு பிறகு) வந்தேன்.
    அருமையான திரைகதை. ஒவ்வொரு காட்சியிலும் மர்மத்தை கூட்டிகொண்டே போய், பிறகு ஒவ்வொன்றாக அவிழ்ப்பது அருமையான நேர்த்தி.  படதொடக்கத்தில் ஒரு பெண் ஜன்னல் வழியாக பார்க்கும்  காட்சியை பிற்பாடு அதே  ஜன்னலை திறந்து பார்த்து விட்டு ஒரு மர்ம முடிச்சியை அவிழ்க்கும் விதமாக ஒரு உண்மையை சொல்லும் விதம் கை தட்டவைக்கும் யுக்தி.
            அதேபோல் சுஜாதா பாணியில் வில்லன் dr.பாஷ்யத்துக்கு போன் செய்து “உங்களுடன் படித்தவர்கள் வேறு யார் சென்னையில் இருக்கிறார்கள்” என்று கேட்டு விட்டு பதிலை சஸ்பென்ஸாக வைத்து ”ஆளை கண்டுபிடித்தாகி விட்டது. போகலாம்” என்று சொல்லிகிளம்புமிடம் சூப்பர்.
 நடிப்பில் சேரன், ஜெயபிரகாஷ் அருமை. அதைவிட இந்த படத்தில் வரும் துணை நடிகர்களின் நடிப்பு வெகு யதார்த்தம்.  கேரம் போர்டு  ரவுடி, குண்டு அம்மா, லாட்ஜ் பையன், ஆட்டோ டிரைவர்  சொல்லிகொண்டெ போகலாம். மிஷ்கின் அங்கு நிற்கிறார். கேமிரா வெகு அருமை. வித்தியசமான கோணங்கள். இசை சொல்லியே ஆகவேண்டும். புதுமையான முயற்சி.  பின்னால் மிஷ்கின்தான் தெரிகிறார்.
                     குறைகள் என்று சொன்னால் மர்ம முடிச்சிகளை அவிழ்பது இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். சில இடங்களில் புரியவில்லை.
                      பழைய ஆங்கில படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும்

சொன்னவிதமும், ஓங்கி ஒலிக்கும் சமூக அக்கறையும் நிச்சயம் பாராட்டுக்குரியது
திரையில் உங்கள் பயணம் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள் மிஷ்கின்

Thursday, February 10, 2011

பேச்சு (அ) இளமையில் பேச்சு


என்று ஆரம்பித்தது இந்த பேச்சு
எப்படி ஆரம்பித்தது இந்த பேச்சு
எதற்காக ஆரம்பித்தது இந்த பேச்சு
தெரியவில்லை ஆனால்
ஆரம்பித்த அந்த பேச்சு
யாருக்கும் அடங்காமல்
ஆலவிருட்சமாய் வளர்ந்ததது
பள்ளி விட்டபின் பேச்சு தெருமுனைவரை
பின் உன் தெருமுனை வரை
மீண்டும் காலை தொடர்ந்த பேச்சு  மாலைவரை
மறுநாள் விடுமுறையால் நள்ளிரவு தொடர
நின்று பேச்சு உட்கார்ந்து பேச்சு நடந்து பேச்சு
சினிமாவை பற்றி பேச்சு சினிமா பார்த்து பேச்சு
சினிமா எடுக்க பேச்சு சினிமா வெறுக்க பேச்சு
அரசியல் பேச்சு எதிர்த்து பேச்சு ஆதரித்து பேச்சு
சண்டையில் முடிந்த பேச்சு சமாதானத்திற்காக பேச்சு
அன்பு பேச்சு ஆதரவு பேச்சு காதல் பேச்சு காம பேச்சு
சிரிப்பு பேச்சு கிண்டல் பேச்சு கேலி பேச்சு குத்தல் பேச்சு
 பிரச்சனை பேச்சு அதை தீர்க்க பேச்சு
குடும்ப பேச்சு உலக பேச்சு வெட்டி பேச்சு வேதனை பேச்சு
இன்னும் என்னென்னவே பேச்சு
உலகம் நாளையே முடிந்துவிடுமே என்று விடாத பேச்சு
பேச விஷயம் தீரும் வரை பேச்சு பேச பேச குறையாத பேச்சு
மற்றவரை - பொறமைபடவைத்த பேச்சு கோவபடவைத்த பேச்சு
பேச்சு பேச்சு பேச்சு எங்கும் பேச்சு எதிலும் பேச்சு
இதை இவ்வளவு எழுதியதே குறைவு
இன்னும் எழுதவே முடியாத அளவு
உம் மறந்து விட்டேன்... எழுத்தை பற்றி எழுதாளர் பற்றி பேச்சு

ஆனால் இன்றோ செல்லை எடுத்தவுடன்
“ உம் சொல், அப்புறம் “ முடிக்கும் தோரனையுடன்
ஆரம்பிக்கும் பேச்சு
உம் சொல்லுங்க அப்புறம்